சனி, 2 ஜூலை, 2011

நானும் ஒரு consultantதான். பிறகு ஏன் இந்தப் பதிவு என்று கேட்கிறீர்களா ?

பரந்த நிலப்பரப்பு. அடர்த்தியாகப் புல் வளர்ந்திருக்கிறது. ஒரு பெரிய ஆட்டு மந்தை மேய்ந்து கொண்டிருக்கிறது. மேய்ப்பவர் ஆல மரத்தடியில் ஓய்வாக பல் குத்திக் கொண்டிருக்கிறார்.

பக்கத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு படகுக் கார் 'சரேல்' என்று கிறீச்சிட்டு நிற்கிறது. அதிலிருந்து ஒரு கனவான் இறங்குகிறார். மேய்ப்பவரை கைத்தட்டி அழைகிறார். ஏதோ ஒரு ஊருக்குப் போகும் வழியைக் கேட்கிறார். அவரும் பதில் சொல்கிறார். பயணத்தைத் தொடராமல் உரையாடலைத் தொடர்கிறார்.

" இந்த ஆட்டு மந்தை உங்களோடதா ? "
" ஆமாங்க ஐயா "

" எவ்வளோ ஆடு இருக்கும் ? "
" அது இருக்குங்க... ஒரு எண்ணூறுக்கும் மேல "

" அப்படி குத்து மதிப்பா சொல்லக் கூடாது. கரெக்டா சொல்லணும் "
" தெரியலீங்களே ! "

" அப்படி சரியா தெரிஞ்சுக்காம இருந்தா ஏதாவது ஆடு தொலஞ்சு போனா உங்களுக்குத் தெரியாம போயிடும். அப்ப நஷ்டம் உங்களுக்குத்தானே ! "
" இல்லீங்க ஐயா. தாய் ஆடெல்லாம் குட்டிங்களைப் பாத்துக்கும். ஒண்ணு காணும்ன்னாக் கூட கத்தும். இதே மாதிரி இணை தொலஞ்சாக் கூட கத்தும். அத வெச்சு கண்டு புடிசிடுவேன். "

" இந்த மாதிரி கணக்கு வழக்கும் எழுதப் படிக்கவும் தெரியாததுனாலத்தான் நம்ம நாடு முன்னேறவே மாட்டேன்குது. கொஞ்சம் இருங்க. நா ஹெல்ப் பண்ணறேன் " என்று சொல்லிவிட்டு தன் மடிக் கணினியை எடுத்துக் கொண்டார். GPRS, Satellite camera என இணையத் தொடர்புகளை ஏற்படுத்தி, அந்த நிலப் பரப்பை புகைப் படம் எடுத்து அதில் உள்ள புள்ளிகளை ( ஆட்டின் மின்னணு பிம்பங்கள் ) scanning முறையில் எண்ணி, 936 ஆடுகள் என்று கன கச்சிதமாகச் சொன்னார்.

பிறகு மந்தையிலிருந்து ஒரு குட்டியை எடுத்து தன் காரின் பின் சீட்டில் வைத்தார். " இது நான் செய்த வேலைக்குக் கூலி ! " என்று சொன்னார்.

மேய்பவர் சிரித்துக் கொண்டே, " சார், நீங்க கம்பனிக்கெல்லாம் ஆலோசனை சொல்லறவரா ? " ( consultant ) என்று கேட்டார். கனவானுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது.
" ஆமாம், எப்படி கரைக்டா கண்டு புடிச்சீங்க ? "

" அது ஒண்ணும் இல்லை சார், நீங்க ஊருக்குப் போக வழி கேட்டீங்க. நா சொன்னேன். அப்புறம் நீங்களாவே ஆட்ட கணக்குப் பண்ணித் தரேன்னு சொன்னீங்க. நா வேண்டாம்னு சொன்னேன். நீங்க விடல. ஒரு டப்பாவ எடுத்துக்கிட்டு ஏதோ தட்டுனீங்க. அப்புறம் ஏதோ ஒரு நம்பரைச் சொன்னீங்க. அதனால எனக்கு பெருசா எந்தப் பிரயோஜனமும் இல்லீங்க. அப்புறம் ஒரு குட்டிய எடுத்துகிட்டீங்க. கேட்டா ஒரு ஆட்டுக் குட்டி கூலீன்னு சொல்றீங்க. அது ஆட்டுக் குட்டியே இல்லீங்க. நாய்க்குட்டி. அப்பவே தெரிஞ்சு போச்சுங்க. நீங்க ஆலோசன சொல்லற ஆளுதான்னு ! " என்று ஒரு போடு போட்டார்.

நானும் ஒரு consultantதான். பிறகு ஏன் இந்தப் பதிவு என்று கேட்கிறீர்களா ?

ஆடை இல்லாதவன் மட்டுமல்ல, வருடத்திற்கு இரண்டு முறையாவது நிலைகண்ணாடியில், தன் பிம்பத்தைப் பார்த்து, உள்ளுக்குள் மனம் விட்டுச் சிரித்துக் கொள்ளாதவனும் கூட, அரை மனிதன்தான் !!

கருத்துகள் இல்லை: